2020 ஆம் ஆண்டில் உலகமே கொரோனாத் தொற்றிற்குப் பயந்து lockdown இல் முடங்கி இருக்க, இலங்கையிலோ முதலாவது T20 league இற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. Lanka Premier League (LPL) என்றழைக்கப்பட்ட இந்த போட்டிகளில் ஐந்து அணிகள் இடம்பெறும் எனவும், அந்த ஐந்தில் ஒரு அணியின் பெயர் Jaffna என்று அமையும் என்றும் அறியக் கிடைத்தது.
Jaffna அணியை வாங்க, இங்கிலாந்து, கனடா, ஒஸ்ரேலியா, அமெரிக்காவில் வாழும் பத்து தமிழ் கிரிக்கெட் ஆர்வலர்கள் முன்வந்தார்கள். நெடுந்தீவில் உலாவும் குதிரைகளின் குறியீடாக, யாழ்ப்பாண அணிக்கு Jaffna Stallions என்று பெயரிடப்பட்டது. CSK அணியின் tag line ஆன “விசில் போடு” என்பதைப் போல், Jaffna Stallions அணியின் tag line “வாடா மச்சான்” என்றமைந்தது.
LPL இல் Jaffna Stallions அணியை வாங்குவதன் மூலம், எங்கட பெடியளுக்கு சர்வதேச தரத்தில் கிரிக்கெட் விளையாட வாய்ப்பளிக்க வேண்டும், எங்கள் ஊர்களில் grass root cricket development செய்ய வேண்டும், கிரிக்கெட்டின் ஊடாக எங்கள் பிரதேசங்களில் பொருளாதார அபிவிருத்திக்கும் உதவ வேண்டும், எல்லாத்தையும் விட முக்கியமாக, போதை பாவனை மற்றும் சமூக சீர்கேடுகளில் இருந்து எங்கள் இளையவர்களை விளையாட்டினூடாக விடுவித்து அவர்களிற்கு நல்வாழ்வு அளிக்க வேண்டும் என்பனவே Jaffna Stallions முதலீட்டாளர்களின் குறிக்கோள்களாக இருந்தது.


LPL போட்டிகளில் இலங்கையில் 1st class cricket விளையாடிய உள்ளூர் வீரர்கள் மட்டுமே விளையாடலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் போட்ட விதி, யாழ்ப்பாணப் பெடியளை அணியில் இணைக்கும் Jaffna Stallions முதலீட்டாளர்களின் திட்டத்தில் முதலில் மண்ணை வாரிப் போடுகிறது.
“சரி. நாங்க யாழில் இருந்து மூன்று பெடியளை development players ஆக எங்கட squad இல் வைத்திருக்க அனுமதி தாங்கோ.. அவங்களுக்கும் exposure கிடைக்கும்” என்று Jaffna Stallions அணி SLC இற்கு அலுப்பு கொடுத்து அனுமதியையும் பெற்றுக் கொள்கிறது.
LPL போட்டிகளிற்கு முன்னர், பல்லேகல்ல மைதானத்தில் Jaffna Stallions அணியில் இடம்பிடித்த 14 உள்நாட்டு வீரர்களிற்கும் 6 வெளிநாட்டு வீரர்களிற்கும் பயிற்சிப் பாசறை நடக்கிறது. கோவிட் கால bubble முறையில் நடந்த இந்தக் பயிற்சிப் பாசறைக்கு, யாழில் இருந்து, மத்திய கல்லூரி அணியின் வியாஸ்காந்தும், பரி. யோவானில் இருந்து கபில்ராஜும் தினோஷனும் பங்கெடுக்கச் செல்கிறார்கள்.
2020 நவம்பர் 13-15 காலப்பகுதியில், JS அணியின் பயிற்றுவிப்பாளர்கலான Thilina Kandamby, Hemang Badani, Mario Villavarayan, Sachith Pathirana, Vimukthi Deshapriya, அணியின் தலைவர் Thisara Perera, மற்றும் அணியின் முகாமையளர் வாகீசன் கணேசன் ஆகியோரின் வழிகாட்டலில் பயிற்சிப் பாசறை நடைபெறுகிறது.
Jaffna Stallions அணிக்கு திறமையான பயிற்சியாளர்களை ஒழுங்குபடுத்துவதிலும், சர்வதேச கிரிக்கெட் வீரர்களை விளையாட வைப்பதிலும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆடிய Russell Arnold ஆற்றிய பங்கு அளப்பரியது.
பாசறை முடிந்து Jaffna Stallions அணி, LPL போட்டிகள் நடக்கும் அம்பாந்தோட்டைக்கு பயணிக்க, அணியில் இருந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு உபாதை ஏற்படுகிறது. அந்தச் சந்தர்ப்பத்தை Jaffna Stallions அணியினர் சாமர்த்தியமாகப் பயன்படுத்தி, development squad இல் இருந்த விஜயகாந்த் வியாஸ்காந்தை, Jaffna Stallions அணியின் probable squad இற்கு தரமுயர்த்தப்படுவதாக 20 நவம்பர் 2020 இல் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார்கள்.
ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நிலைகொண்டிருந்த Jaffna Stallions அணியின் Net bowlers ஆக, கிளிநொச்சியில் இருந்து விஜயராஜும், மட்டக்கிளப்பில் இருந்து தேனுரதனும் உள்வாங்கப்படுகிறார்கள்.
நவம்பர் 26, 2020 இல் ஆரம்பமான LPL போட்டிகளில், Jaffna Stallions அணியின் முதலாவது போட்டி நவம்பர் 27 ஆம் திகதிக்கு ஏற்பாடாகி இருந்தது ஏனென்று சொல்லிப் புரியவேண்டியதில்லை. Jaffna Stallions அணியில் இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர்களான வனிந்து ஹசரங்கவும் மகீஷ் தீக்ஷணவும் இடம்பெற்று இருந்ததால், முதல் போட்டியில் வியாஸ்காந்த் தெரிவாகவில்லை.
சமூக வலைத்தளங்களில் “யாழ்ப்பாண பெடியள் யாரும் இல்லாத Jaffna அணி” என்று franchise cricket தெரியாதவர்கள் முழங்கிக் கொண்டிருக்க, “சரியான நேரத்தில் ஆளை இறக்குவம்” என்று Jaffna Stallions அணியின் CEO ஆன ஆனந்தன் ஆர்னல்ட் அண்ணா உறுதியாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
நவம்பர் 30 இல் தம்புள்ள அணியுடன் ஆடிய இரண்டாவது ஆட்டத்திலும் வியாஸ் இல்லை, அடுத்த நாள் கண்டி அணியுடன் ஆடிய ஆட்டத்திலும் Jaffna Stallions அணியில் வியாஸ் ஆடவில்லை. Jaffna Stallions அணி முதல் மூன்று போட்டிகளையும் வென்று முன்னனியில் திகழ்கிறது, வனிந்து ஹசரங்க அபாரமாக பத்து வீசிக் கொண்டிருக்கிறார். இந்த 2020 LPL போட்டிகளே அடுத்தாண்டு ஹசரங்கரவை IPL இற்கு தெரிவாக அடிகோலியது.
சரி, காலி அணியுடன் டிசம்பர் 3 இல் நடந்த போட்டியில் வியாஸை இறக்குவார்கள் என்று பார்த்தால், அதிலும் ஆள் இல்லை. நாலாவது போட்டியையும் Jaffna Stallions வென்று விட்டது.
“சரி அவ்வளவு தான்” என்று மனதை ஆறுதல்படுத்தி விட்டு இருக்க, டிசம்பர் 4 அதிகாலையில் ஆனந்தன் ஆர்னல்ட் அண்ணாவிடம் இருந்து WhatsApp message .. “Our Boy will play today”.
டிசம்பர் 4, 2020, ஹம்பாந்தோட்டை.
Colombo Kings அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் Jaffna Stallions அணியில் வியாஸ்காந்தின் பெயரும் இடம்பெறுகிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna Stallions அணியால் 148 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. Jaffna Stallions இன்னிங்ஸில் ஹசரங்க (41) ஆட்டமிழக்க, இன்னிங்ஸின் கடைசி ஓவரில் களமிறங்கிய வியாஸ்காந்த் நான்கு பந்துகளை முகம் கொண்டு ஆட்டமிழக்காமல் மூன்று ஓட்டங்களை எடுக்கிறார்.
Dinesh Chandimal இன் அதிரடி ஆட்டத்தில் Colombo Kings அணி வேகமாக 7 ஓவர்களில் 53/2 ஓட்டங்களைக் குவித்துக் கொண்டிருக்க, இன்னிங்ஸின் எட்டாவது ஓவரை பந்து வீச வியாஸ்காந்தை Jaffna Stallions அணியின் தலைவர் Thisara Perera அழைக்கிறார். முழு யாழ்ப்பாணமும், தமிழ் கிரிக்கெட் உலகமும் எதிர்பாத்திருந்த அந்தப் பொழுது அம்பாந்தோட்டையில் அரங்கேறுகிறது.
இலங்கை அணியின் தலைவர்களாக இருந்த Angelo Mathews உம் Dinesh Chandimal உம் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்க, தனது முதலிரு ஓவர்களிலும் பன்னிரண்டு ஓட்டங்களை கொடுத்து வியாஸ்காந்த் நிதானதாக பந்து வீசுகிறார். Dew இல் நனைந்த பந்தை, தனது இடுப்பில் செருகியிருந்த துவாயால் துவைத்துக் கொடுத்துக் கொண்டே, ஹசரங்க வியாஸ்காந்தை உற்சாகப்படுத்தி வழிநடத்துவது மனதை நெகிழ வைக்கிறது.
வியாஸ்காந்தின் மூன்றாவது ஓவரின் முதலாவது பந்தை Chandimal பவுண்டிரிக்கு அனுப்புகிறார். அதே ஓவரின் நான்காவது பந்தை Angelo Mathews ஒங்கி சிக்ஸர் அடிக்கிறார். கொஞ்சம் நிலைகுலைந்த வியாஸை ஹசரங்கவும் திஸரவும் உற்சாகமூட்டுகிறார்கள்.
மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்து.
வியாஸ்காந்த் மெதுவாக ஓடிவந்து, கையைச் சுழற்றி வீச, மீண்டும் மத்தியூஸ் ஓங்கி அடிக்கிறார், ஐயோ அடுத்த சிக்ஸர் என்று ஏங்கிக் கொண்டிருக்க, பவுண்ட்ரியில் நின்ற பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் Shoaib Malik இன் கையில் பந்து பதுமையாக இறங்குகிறது.
Angelo Mathews c Shoaib Malik b Viyaskanth 22 (24)
அதன் பின்னர் களமிறங்கிய West Indies அணியின் Andre Russell இற்கு வியாஸ்காந்த் வீசிய அந்த மூன்று dot balls ஐயும் அந்த ஆட்டத்தை அன்று பார்த்த யாரும் மறத்திருக்க மாட்டார்கள்.
தமிழ் மண்ணில் இருந்து ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரன் உருவாக வேண்டும் என்ற பலரின் பல்லாண்டு கனவை அந்தக் கணங்கள் ஆரம்பித்து வைத்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து முதலாவது professional league cricketer உருவாகிவிட்டான்!
Jaffna Stallions அணி தோற்ற அந்த ஆட்டத்தில், 4-0-29-1 என்ற பெறுபேறுகளுடன் வியாஸ்காந்த் சர்வதேச league cricket உலகிற்குள் காலடி எடுத்து வைக்க, அடுத்த நாள், CricInfo “Vijayakanth Viyaskanth spins himself into Jaffna history books” , “Jaffna stops as her precious son bags the scalp of ex-Sri Lanka captain” என்று Sunday Observer பத்திரிகையும் தலையங்கங்கள் தீட்டிக் கொண்டிருக்க, Twitter இல் இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பாவான்களும் சிரிலங்காவின் அரசியல் தலைவர்களும் வியாஸின் வரவை வாழ்த்திக் கொண்டிருந்தார்கள்.
LPL போட்டிகளில் JS அணியில் ஆடுவதற்கான match fee ஐ அனுப்ப, ஆனந்தன் ஆர்னல்ட் வியாஸ்காந்திற்கு அழைப்பெடுத்த போது நடந்த நெகிழ்வான சம்பவத்தின் நினைவை வியாஸ்காந்தே ஒரு நாள் சொல்வார்.
LPL போட்டிகள் முடிவடைந்த பின்னர், வியாஸ்காந்தை இன்பத்தமிழ் வானொலி பேட்டி காணும். “அப்ப உங்களுடைய அடுத்த இலக்கு என்ன?” என்று இன்பத்தமிழ் வானொலி கேட்கும் கேள்விக்கு “Big Match வெல்லோணும்”என்று வியாஸிடமிருந்து பட்டென்று பதில் வரும். ஆனால், 2021 இல் வியாஸ்காந்த் மத்திய கல்லூரியை தலைமை தாங்கிய போது, கோவிட் கால lock down நடந்ததால், Big Match நடைபெறவில்லை.

அம்பாந்தோட்டையில் Jaffna Stallions அணியோடு தொடங்கிய வியாஸின் பயணம், பின்னர் Jaffna Kings அணியோடும், Bangladesh Premier League இலும், IPL இல் Rajasthan Royals அணியின் Net bowler ஆகவும், ஆகக் கடைசியாக டுபாயில் Mumbai Indians அணியினரின் MI Emirates அணியோடும் தொடர, படிப்பிற்காக பிள்ளைகளை விளையாடாமல் மறிக்கும் யாழ்ப்பாணத்தாருக்கு, கிரிக்கெட் மூலமும் தொழில்ரீதியாக நல்ல வருமானம் ஈட்டலாம் என்று வியாஸ்காந்த் காட்டிக் கொண்டிருக்கிறான்.
ஆசியப் போட்டிகளில் ஆடிய இலங்கை அணியிலும் இடம்பிடித்த வியாஸ், தற்பொழுது இலங்கையின் first class cricket போட்டிகளில் Tamil Union அணிக்கு ஆடியும் வருகிறான். கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட இலங்கையின் National Super League (NSL) போட்டிகளில் ஆட, யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருக்கும் இன்னுமொரு நம்பிக்கை நட்சத்திரமான அபினாஷோடு வியாஸ்காந்தும் தெரிவாகி இருக்கிறான்.
ICC ஆலும் BBC இலும், நன்றாக நடத்தப்பட்ட cricket franchise என்று புகழப்பட்ட Jaffna Stallions முதலீட்டாட்டாளர்க, 2020 இற்கு பின்னர் Jaffna அணியை நடாத்தும் வாய்ப்பு அபகரிக்கப்பட்டதும், 2020 இற்கு பின்னர் தமிழ் பிரதேசங்களில் இருந்து எந்தவொரு கிரிக்கெட் வீரனும் LPL இல் அறிமுகமாகாமல் போனதும் வேதனை.
எங்களை முன்னேறவிடாமல் தடுக்கவும், எங்களை ஓரங்கட்டவும், எங்களுக்கு வாய்ப்புக்கள் வழங்க மறுக்கவும் அவர்கள் முழு முனைப்போடு இருக்கையில், அதைவிட அதிக முனைப்போடும் சாமர்த்தியத்துடனும் நாங்கள் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் Jaffna Stallions இன் LPL அனுபவம் படிப்பினையாகவும் பட்டறிவாகவும் விட்டுச்சென்றிருக்கிறது.
எங்கள் முதலீட்டில், எங்கள் கட்டுப்பாட்டில், நாங்கள் இயக்கும் நிறுவனங்களினூடாக, எங்கட பிள்ளைகளின் வருங்காலத்தை எங்களால் வளப்படுத்த முடியும் என்பதற்கு Jaffna Stallions உம் வியாஸ்காந்தும் முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.
Written By:
Jude Prakash Melbourne
